ஆண்டு 1834
காற்றினால் நகர்ந்து கொண்டிருந்த மேகங்களுக்கு நடுவே மிதந்து கொண்டிருந்த நிலா, பொன் நிற ஒளியை பரப்பிக் கொண்டிருந்தது.
மேற்குப் பேரரசான வலேரியாவிற்கும் தென் பேரரசான மித்வெல்டிற்கும் இடையில் ஒரு ஆற்றின் கரைக்கு அருகில் வாழ்ந்த கிராமவாசிகளுக்கு இது மற்ற இரவுகளைப் போலவே இருந்தது. ஒவ்வொரு பேரரசுக்கும் அதன் சொந்த கிராமங்கள் மற்றும் நகரங்கள் இருந்தன, இருப்பினும், இந்த குறிப்பிட்ட நிலம் எந்தப் பேரரசைச் சேர்ந்தது என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
அந்த கிராமத்தைச் சூழ்ந்திருந்த காடு அந்தி வேளைக்குப் பின் இருளாக மாறியிருந்தபோது, அவர்களது சிறிய வீடுகளைச் சுற்றி விளக்குகள் ஏற்ற பட்டன.
ஒரு வீட்டில், ஆறு வயதுடைய ஒரு சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தாள். அவள் இப்போது தன் தந்தையிடமிருந்து பெற்ற முயலைக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். காட்டில் துள்ளிக் குதிக்கும் விலங்குகளின் சிறிய ரோமங்களை அவள் அடிக்கடி பார்ப்பாள். ஆனால் அதை இவ்வளவு நெருக்கமாகச் செல்லமாக வளர்க்கும் வாய்ப்பு கிடைத்ததில்லை. அவள் தன் சிறிய கையால் அந்த வெள்ளை ரோமத்தின் குறுக்கே தடவினாள். அப்போது அவளுடைய அம்மா அவளை அழைப்பதைக் கேட்டாள்.
"கேட்டி!" அம்மா அவளை அழைத்தாள், அவள் குரலில் பீதி இருந்தது.
அந்தச் சிறுமி தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து, முயலைத் தன் கைகளில் தூக்கி கொண்டு, அம்மாவைச் சந்திக்க தன் சிறிய அறையிலிருந்து வெளியே நடந்தாள். வாசலைப் பார்த்துக் கொண்டே இருந்த அவள் அம்மா பயந்து போயிருந்தாள்.
"கண்ணே," என்று கூறி அவள் அம்மா குனிந்து சிறுமியின் கண்ணைப் பார்த்து, "நீ இங்கேயே இரு, கதவை மூடிக்கொள், உன் அப்பா அல்லது நான் உன்னை அழைத்துச் செல்லும் வரைத் திறக்க வேண்டாம்."
"எங்கே போகிறீர்?" அவள் அம்மாவைப் பார்த்துக் கேட்டாள், அவளது பழுப்பு நிற கண்கள் கேள்வியுடன் காணப்பட்டன.
அதே நேரத்தில், ஒரு பெண்ணின் அழுகுரல் வெளியே எதிரொலித்து, தாயையும் மகளையும் ஜன்னல் பக்கம் பார்க்க வைத்தது. கவலையுற்ற தாய் மகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக மகளின் முகத்தை இரு கைகளிலும் பிடித்தாள்.
"கேட்டி, என் அன்பே," அவள் தனது சிறிய மகளிடம் மெதுவாகக் கூறினாள், "அப்பா, அம்மா உன்னை எப்போதும் நேசிப்போம். கவனித்துக்கொள், என் குழந்தையே, "என்று மகளின் நெற்றியில் ஒரு முத்தம் வைக்க அவள் கண்களில் கண்ணீர் குளம் போல் தேங்கியது.
அவளுக்கு விளக்கமளிக்க நேரமில்லை என்று அவளுக்குத் தெரியும். அவள் சொன்னாலும், அவளுடைய குழந்தைக்குப் புரியுமா? கேட்டி, மென்மை மற்றும் அன்பு சூழ்ந்த சூழலில் வளர்ந்தவள். இளம் மொட்டு அழகான மலராக மலர வேண்டிய வயதில் அவள் இருந்தாள். ஆனால் அவள் விதியோ தவிர்க்க முடியாதது. அபாயகரமான ஒன்று அவர்கள் வழியில் செல்கிறது என்பது அவளுக்குத் தெரியாது. பெண்கள் மற்றும் ஆண்களின் அலறல்களால் அப்பகுதி நிரம்பியிருக்கையில் யாரோ சத்தமாகக் கதவைத் தட்டினர்.
"மறைந்துகொள்!" என்று தாய் கத்த, சிறுமி படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொள்ளத் துடித்தாள்.
சிறுமி ஏதோ தவறு இருப்பதாக அறிந்தாள், என்ன நடக்கிறது என்பதை அறிய விரும்பினாள், ஆனால் அவளுடைய தாய் அவளை மறைந்து இருக்கச் சொன்னாள். வீட்டிற்கு வெளியே கேட்ட அழுகைகளும், சத்தமும் அவளைப் பயமுறுத்தியது. பயத்தில் முயலை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அப்போது அறையின் கதவு இடிந்து விழும் சத்தம் கேட்டது, அதைத் தொடர்ந்து ஒரு மயான அமைதி நிலவியது. கேட்டி தன் மறைவை விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தாள். அப்போது ஓர் ஆண் மகன் தன் தாயின் கழுத்தில் அவன் பற்கள் பதிந்து இருந்ததைக் கண்டு குழப்பம் அடைந்தாள். அவள் கழுத்திலிருந்து ரத்தம் குடித்துக் கொண்டிருக்க, ரத்தத்தின் சிறு துளிகள் அவன் வாய் ஓரம் வழிந்தது.
"அ- அம்மா?" உயிரற்ற தோற்றத்திலிருந்த அம்மாவை அழைத்தாள். அவள் முகத்தில் புன்னகை இல்லை, அவள் கண்கள் வெறுமையாகத் தெரிந்தன. அவளுடைய அம்மா எப்பொழுதோ இறந்துவிட்டார், இப்போது ஒரு சதைப்பிண்டம் தான்.
அவள் பேசுவதைக் கேட்டு, அந்தப் பெண்ணின் ரத்தத்தை குடித்துக் கொண்டிருந்தவன், வாசலில் நின்றிருந்த சிறுமியின் மீது பார்வையைப் பதித்தான். வெறித்தனமான புன்னகையுடன் தன் எதிரில் இருந்தவளைப் பின்தொடர்ந்தபடி, தன் உதடுகளை நக்க, தன் கைகளில் இருந்த பெண்ணை தரையில் வீசினான். இப்போது எதிரே நிற்கும் புதிய இரையைப் பற்றி நினைக்கும் போது அவனது பிரகாசமான சிவப்பு கண்கள் உற்சாகத்தில் மின்னின.
அவள் மற்றொரு அறைக்குத் தப்பிச் செல்வதைக் கண்ட அவன், "ஒரு வாம்பைருக்கு விருந்தளிக்க ஒரு சிறுமி," என்று கூறிக் கொண்டே அவளை வேகமாக அடைந்தான். "ஒரு வாம்பைரியின் பரிதாபத்தின் கீழ் ஒரு சிறிய ஆதரவற்ற குழந்தை. உங்கள் வகையினர் நாங்கள் சொல்வதைக் கேட்டிருந்தால் இப்படி இருக்காது, ஆனால் உங்கள் நிலைமையைப் பார். நான் உனது இனிய இரத்தத்தைக் குடித்து மகிழப் போகிறேன்."
கேட்டி எதுவும் பேசவில்லை, ஆனால் பயத்தில் கைகள் நடுங்கியதுடன் மெதுவாகப் பின்வாங்கினாள். அவள் மூலையில் வந்தடைந்தாள், இப்போது வேறு எங்கும் செல்ல வழி இல்லை. எதிரில் இருந்தவன் அவளுக்காக முன் வந்தபோது, அவள் கண்களை இறுக்கி மூடிக் கொண்டாள், ஆனால் காற்றில் ஒரு டப் சத்தமும் தரையில் ஒரு இடி சத்தமும் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை. மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தாள், அந்த மனிதன் தரையில் படுத்திருப்பதைக் கண்டாள். அவள் பார்வையை மேல்நோக்கி நகர்த்த, அவள் தரையில் கிடப்பவரின் கண்களைப் போலல்லாமல் ஒரு ஜோடி அடர் சிவப்பு கண்களைக் கண்டாள்.
இருவரும் ஒருவரையொருவர் பார்த்தனர், ஒருவர் பயந்த முகபாவத்துடன், மற்றவர் ஆர்வத்தால், அவள் கையில் இருந்த விலங்கைப் பார்த்தார். அந்த உயரமான மனிதன் ஒரு அடி முன்னே வந்ததும் சிறுமி பேசினாள்.
"தயவுசெய்து அதைக் கொல்லாதே," அவள் முயலைத் தன் மார்போடு சேர்த்துக் கொண்டாள்.